உரோமையில் அருளாளர் நிலை அறிவிப்புத் திருப்பணி

இறை ஊழியர் லூயி மரி லெவே
உரோமையில் அருளாளர் நிலை அறிவிப்புத் திருப்பணி

இறை ஊழியர் லெவே அவர்களின் அருளாளர் நிலை அறிவிப்புத் திருப்பணிக்கான மறைமாவட்ட ஆய்வு 2019 ஜுன் மாதம் நிறைவுபெற்றது. இத்திருப்பணியை உரோமையில் தொடர்ந்து ஆற்றுவதற்காக சிவகங்கை மறைமாவட்ட ஆயர் மேதகு செ. சூசைமாணிக்கம் அவர்கள் வத்திக்கானில் வேண்டுகையாளரை நியமனம் செய்துள்ளார். அருட்பணி. பாஸ்கால் செபோலாடா சில்வெஸ்டர் சே.ச., (Rev. Fr. Pascual Cebollada Silvestre S.J.) அவர்கள் 2019 ஜுன் 10-ஆம் நாள் மேதகு ஆயர் அவர்களால் உரோமையில் வேண்டுகையாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அருட்பணி. பாஸ்கால் வத்திக்கான் இயேசு சபை தலைமையகத்தில் இயேசு சபை துறவிகளின் புனிதர் பட்டத் திருப்பணிக்கான வேண்டுகையாளராகப் பணியாற்றி வருகிறார். கடந்த செபடம்பர் மாதம் உரோமை புனிதர் பட்டத் திருப்பணிப் பேராயத்தின் ஒப்புதலைப் பெற்று இறை ஊழியர் லெவே அவர்களுக்கான வேண்டுகையாளர் பணியைத் தொடங்கியுள்ளார்.

மறைமாவட்ட ஆய்வின் ஆவணங்கள் அடங்கிய பெட்டிகள் 2019 ஜுலை மாதம் திருத்தந்தையின் இந்தியத் தூதுவர் மூலம் உரோமைக்கு அனுப்பப்பட்டன. ஆவணங்கள் உரோமைப் புனிதர் பட்டத் திருப்பணிப் பேராயத்தை ஆகஸ்டு மாதம் சென்றடைந்தன. நவம்பர் மாதம் 11-ஆம் நாள் ஆவணங்கள் அடங்கிய பெட்டிகள் வத்திக்கான் புனிதர் பட்டத் திருப்பணிப் பேராய அலுவலகத்தில் பேராயத்தின் செயலர் அவர்களால் திறக்கப்பட்டன. ஆவணங்கள் அனைத்தும் சரிபார்க்கப்பட்டு அடுத்தக்கட்டப் பணிகள் ஆரம்பமாகியுள்ளன. இந்நிகழ்வில் அருட்பணி. பாஸ்கால் சே.ச., மற்றும் இந்திய இயேசு சபைக் குருக்கள் அருட்பணி. லிஸ்பெர்ட் டிசூஸா, அருட்பணி. ஜோசப் செபஸ்தியான், அருட்பணி. டு.ஓ. ஜெரோம், ஆகிய மூவர் கலந்துகொண்டனர். மறைமாவட்ட ஆவணங்களை ஆய்வு செய்யும் பணி சிறப்பாக நடைபெறவும் இறை ஊழியர் லெவே அவர்கள் விரைவில் ‘வணக்கத்திற்குரியவர்’ (ஏநநெசயடிடந) என அறிவிக்கப்படவும் இறைவனிடம் மன்றாட உங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

அருட்பணி. S. ஜேம்ஸ் அந்துவான் தாஸ்

துணை வேண்டுகையாளர்
சிவகங்கை